சில காதல் ஜோடிகள் எஸ்எம்எஸ்களில் முத்த மழை பொழிந்து கொள்வார்கள். ‘அன்பே உனக்கு ஆயிரம் முத்தங்கள்..’ ‘இச் இச் இச்..’ என்று விதவிதமாக முத்த மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். இதன் அடுத்தகட்டம் எம்எம்எஸ். முத்த ஸ்பெஷல் கார்ட்டூனோ, படமோ, காட்சியோ அனுப்பலாம். ‘இச்’ என்ற சத்தமும் கூடவே சேர்ந்து வரும் என்பதால், இன்னும் கொஞ்சம் கூடுதல் எஃபெக்ட் கிடைக்கும். காதலர்களுக்கு ஏன் இவ்வளவு சிரமம் என்று யோசித்திருக்கிறார் சிங்கப்பூரை சேர்ந்த ‘லவ்வோடிக்ஸ்’ ஆய்வு மையத்தின் தலைமை விஞ்ஞானி ஹூமன் சமானி
காதலர்கள் ‘ஆன்லைனில்’ முத்தத்தை பரிமாறிக் கொள்ள வசதியாக ‘கிஸஞ்சர்’ என்ற ரோபோ கருவியை உருவாக்கியுள்ளார். கார்ட்டூன்களில் வரும் பசு, பன்றிக் குட்டி சாயலில் கிஸஞ்சர் உருவாக்கப்பட்டுள்ளது. இரு கைகளிலும் அடங்குகிற பந்து சைஸில் இருக்கிறது. சின்ன சின்னதாய் கண், கால்கள். பந்தின் நடுநாயகமாக ‘உதடு’. இது எவ்வளவு எச்சில் பட்டாலும் பாதிக்கப்படாத வகையில் ரப்பர் போன்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் கடலை போடுவதற்காக காதலனும் காதலியும் ஆளுக்கொரு செல்போன் வைத்துக்கொள்வது போல, ஆளுக்கொரு ‘கிஸஞ்சர்’ வைத்துக் கொள்ள வேண்டும். இன்டர்நெட் இணைப்பு உள்ள கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்புடன் யுஎஸ்பி மூலம் கிஸஞ்சரை இணைத்துவிட்டு, வசதியாக கைகளில் பிடித்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். கிஸஞ்சரை வைத்திருக்கும் காதலன் அந்த முனையில் தரும் ‘உம்மா’, அடுத்த கணம், இன்டர்நெட் வழியாக விர்ரென பறந்து, காதலியின் கிஸஞ்சருக்கு வந்துவிடும். காதலன் எவ்வளவு அழுத்தத்தில், ‘உம்மா’ கொடுத்தானோ, அதில் இம்மிகூட குறையாமல் அதே ‘பஞ்ச்’சுடன் அதே முத்தத்தை காதலியின் உதட்டில் கிஸஞ்சர் பதிவு செய்யும். மாறி மாறி பதில் முத்தங்களை பதிவு செய்வது காதலர்களின் சாமர்த்தியம்.‘‘பிரிந்திருக்கும் கணவன் – மனைவி, காதலன் – காதலிக்கு முத்தம் பகிர்ந்துகொள்வது மிகவும் சுவாரஸ்யம். அதற்காகவே கிஸஞ்சரை உருவாக்கியுள்ளேன்’’ என்கிறார் ஹூமன் சமானி.
No comments:
Post a Comment